Wednesday, July 16, 2014

விலங்கு பல்வகைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்கள்



முன்னுரை 
பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெறும் கற்களும் மண்ணும் உவர் நீருமே காணப்பட்ட பூமியில், சாதகமான சூழல் உருவாகி, அமினோ அமிலங்கள் உருவாகி, அதன் பின்னர் ஒரு கலவுயிர், இருகலவுயிர், பல கலவுயிரென உயிர்கள் தோற்றம் பெற்றன. இதை மாணிக்கவாசகர், ‘புல்லாகிப் பூண்டாகிப் புழுவாய் மரமாகிப் பல்மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்...என சிவபுராணத்தில் பாடியுள்ளார். இப்பூமியில் வாழ்ந்த பல உயிரினங்களின் தற்போதைய நிலையென்ன? அவை எவ்வாறு அழிந்துபோயின? போன்ற பல கேள்விகள் காலங்காலமாக வினவப்பட்டு வந்தன. இந்நிலையில், சார்லஸ் டார்வின் இயற்கைத்தேர்வு கொள்கையை முன்வைத்தார். அது பல சந்தேகங்களுக்குத் தீர்வாகி, ‘தக்கன பிழைக்கும்; நலிந்தன அழியும் என்ற கொள்கைக்கு வித்திட்டது. இருப்பினும், அக்கொள்கையையும் தாண்டி இனமொன்று அழிந்துபோவதற்கு நேரடிக் காரணங்களும் பல மறைமுகமான காரணங்களும் உள்ளன. இயற்கையாகவே, உயிரினங்களுக்கு இடையிலான சமநிலை காலப்போக்கில் உருவாகிய பல காரணங்களால் குலைய ஆரம்பித்தன. இதனால் பல உயிரினங்கள் அழிந்தன. மேலும்பல, அருகிவரும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இன்று
எங்கள் இருப்பிடத்தை மாற்றி அமைத்தோம்
எனவே
எண்ணில்லா பல உயிரினங்கள்
எங்கோ சென்றன….
இருப்பிடத்தை மாற்றி
அவைகளின்  
அலைக்கழிப்போ அழுகுரலோ… ​
அங்கலாய்ப்போஎதிர் கூச்சலோ
எங்களின் காதில் விழவுமில்லை
தங்களின் இதயம் தொடவுமில்லை
என்ற புதுக்கவிதைக்கேற்ப நம் கண்முன்னே கரைந்து காணாமல் போகும் இயற்கையும், சுற்றுச்சூழலும் ஒவ்வொருக் கணத்திலும் இறந்து கொண்டே இருப்பதை,  அறிபவர் யார்?
காலநிலை மாற்றம்
நமது பூமிப்பந்தைச் சுற்றிலும் பலவகையான வளிமண்டல அடுக்குகள் உள்ளன. இவை சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை தடுக்கும் கவசமாக செயல்படுவதோடு, சூரியனில் இருந்து வரும் அகச்சிவப்பு, மற்றும் புறஊதாக்கதிர்களை வடிகட்டி அனுப்புகின்றன. இந்த வடிகட்டும் அமைப்பு பசுமைக் குடில் வாயுக்கள் உள்ளிட்ட சில காரணிகளால் பாதிக்கப்படும் போது அதிகமான வெப்பக்கதிர்கள் பூமியை வந்தடைந்து பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்றன. இந்நிகழ்வை புவி வெப்பமடைதல் (Global Warming) என்கிறோம். இவ்வாறு, புவி வெப்பமடைவதால் பூமியின் பருவகாலநிலை, தட்ப வெட்பநிலை, இயற்கைச் சீற்ற நிகழ்வுகள் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களே காலநிலை மாற்றம். சுருங்கக்கூறின் ஒரு பகுதியின் சராசரி வானிலையில் ஏற்படும் மாற்றம்தான் காலநிலை மாற்றம் (Climate Change) ஆகும்.
உயிர்ப் பல்வகைமை (Animal Diversity)
உயிரியியல் அறிஞர்களின் கூற்றுப்படி, புவியில் காணப்படும் இனங்களின் வேறுபட்ட தன்மையே உயிர்ப் பல்வகைமையாகும். 1972இல் நடைபெற்ற ஐ.நா. சபையின் புவி மாநாட்டில் உயிரியல் பல்வகைமையென்பதுதாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏனைய நீர்சார் சூழலியல் முறைமைகள், நீர்வாழ் சூழலியல் தொகுதிகள் உட்பட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும்என்ற வரைவிலக்கணம் முன்வைக்கப்பட்டது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள்
உலகின் எல்லா கண்டங்களிலும், சமுத்திரங்களை ஒட்டிய பகுதிகளிலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் கண்கூடாக தெரிகின்றன. 2007ஆம் ஆண்டில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னர், தற்போது 7 ஆண்டுகளின் இறுதியில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் 2 மடங்காகி உள்ளமைக்கான விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா கண்டங்களின் நிலம் முழுவதையும் பனிப்பாறைகள் மூடியிருக்கின்றன. தரையிலிருந்து 1.6 கிலோ மீட்டர் அளவு வரை நிலத்தைப் பனிப்பாறைகள் சூழ்ந்திருக்கின்றன. துருவப்பகுதிகளில், புவி வெப்பம் 4 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளதால், பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துவிட்டன. இதனால், கடல் நீர் மட்டம் உயர்ந்துவிடும் என ஆராய்ச்சியாளர்கள் அபாயக்குரலில் எச்சரித்துள்ளனர். மாலத்தீவு 2050ஆம் ஆண்டில் மூழ்கிவிடும் என்றும் கூறியுள்ளனர். போரினால், மொழியினால், இனத்தினால் அகதிகள் உருவாகும் நிலை மாறி, தற்பொழுது பருவநிலை மாற்றத்தினால் அகதிகள் உருவாகும்  நிலை ஏற்பட்டுள்ளது.
இமயமலையில் உள்ள பனிப்பாறைகளும் உருக ஆரம்பித்துவிட்டன. பனிப்பாறைகள் மட்டும் இல்லாவிடில், கங்கை, பிரம்மபுத்திரா நதிகள் இல்லாமல் போய்விடும். ஆப்பிரிக்காவில் உள்ள மிக உயரமான கிளிமாஞ்சரோ சிகர பனிப்பாறைகள் கரைந்துவிட்டன. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மூன்று ஏரிகளான சாட், டங்கானிகா மற்றும் ஃபகுபின் வற்றிவிட்டன. தட்ப வெட்ப நிலை அதிகரிப்பால், கடந்த 2003ஆம் ஆண்டில், ஐரோப்பாவில் ஏற்பட்ட வெப்பஅலையால் 80,000க்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். இதுபோன்று வெப்ப அலை உலக முழுவதும் அதிகம் ஏற்படலாம்.  தட்ப வெட்ப நிலை அதிகரிப்பால், தாவரங்களில் மகரந்தச்சேர்க்கைப் பாதிக்கப்படுகின்றது. வெப்பம் தாங்காமல், பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. இதன் காரணமாக, விவசாய விளைச்சல் குறைந்துவிடுகின்றன. விவசாய உற்பத்தி குறைந்துள்ளதால், உணவுப்பஞ்சம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
குளிர்காலத்தின் காலஅளவில் 11 நாட்கள் குறைந்து, கோடைகாலத்தின் அளவு நீண்டு கொண்டு செல்கிறது. வெப்பநிலை அதிகரிப்பால், அதிக அளவில் சூறாவளிகள், புயல்கள், வெப்ப அலைகள், புவியில் ஏற்பட்டுள்ளன. எல் நினோ, லா நினோ, கத்ரினா, ரியா, தானே என பல புயல்கள் பருவநிலை மாற்றத்தின் விளைவாக உருவாகி, உலகத்தைத் தாக்கியுள்ளன. உயிரினங்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்கு நேரம் இல்லாத காரணத்தினால், ஏராளமான உயிரினங்கள் அழிந்துவிட்டன. ஒருபுறம் வறட்சியால் விபரீத விளைவுகளும், மறுபுறம் மழை, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைப் பேரழிவுகளும் நிகழும் அபாயம் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு காலநிலை மாற்றங்களுக்கு அடிப்படைக் காரணமான மனிதகுலம்  ஒருபுறம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் ஒன்றுமே  அறியாத இன்னபிற உயிரினங்களும் வாழ்வின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன என்பது நிதர்சனமான உண்மை. ஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனிதகுலமும் கடுமையான பருவநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தாகவேண்டிய நிலை ஏற்படும்.
பருவநிலை மாற்றத்தால் அழியும் உயிரினங்கள்
புவி வெப்பமடைவது நீண்டகால நோக்கில் உயிரினங்கள் அழிவடைவதற்குக் காரணமாகின்றது. இன்று இருக்கும் நிலத்தாவரங்கள், விலங்குகளில் 25 சதவீதமானவை 2050ஆம் ஆண்டளவில் அழிந்து போகுமென கூறப்படுகிறது. அதேசமயம் இன்று இருக்கும் இனங்களில் 33–50 சதவீதமான இனங்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. காலநிலை மாற்றம் மட்டுமன்றிக் காடு அழிப்பும்  பல இனங்களின் அழிவுக்குக் காரணமாகின்றது.
இனங்கள் காலநிலை மாற்றத்திற்கேற்றவாறு தம்மை மாற்றியமைக்கும் எனும் கருத்து பலரால் முன்வைக்கப்படுகின்றது. எனினும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளான மாற்றமடையும் மழை வீழ்ச்சி, பருவகாலங்கள் மற்றும் வெப்பநிலை, உயரும் கடல் மட்டம், வேறுபட்ட  சூழல் தொகுதியின் கட்டமைப்பு, கிடைக்கும் உணவின் அளவிலான மாற்றம் போன்ற பல காரணிகள் பாதிப்பை எற்படுத்தும். படிப்படியான காலநிலை மாற்றத்தினாலேயே பெரிய அளவினாலான அழிவுகள் இடம்பெற்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு, 1981ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் சிவப்புப் பட்டியல் என்ற பெயரில் பல்வேறு தாவர மற்றும் விலங்குகளின் சுழியல் தரத்திற்கேற்ப அவற்றின் காப்பு நிலையை தர வகைப்படுத்தி வெளியிடுகிறது. அத்தர வகையாவன (1) இனஅழிவு நிகழ்ச்சியினால் அற்றுவிட்ட இனம் (Extinct), (2) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (Extinct in the Wild), (3) மிக அருகிய இனம் (Critically Endangered), (4) அருகிய இனம் (Endangered), (5) அழிவாய்ப்பு இனம் (Vulnerable), (6) காப்பு சார்ந்த இனம் (Conservation Dependant), (7) அச்சுறு நிலையை அண்மித்த இனம் (Near Threatened), (8) தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் (Least Concern), (9) தரவுகள் போதாது (Data Deficient), (10) மதிப்பீடு செய்யப்படவில்லை (Not Evaluated).
அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள்
உலகில் ஏற்படும் சுற்றுப்புற சூழ்நிலை மாற்றங்களால் பல உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளன. புவி வெப்பமாதல், பருவநிலை அல்லது காலநிலை மாற்றம், காடுகளை அழித்தல், மற்றும் விலங்குகளை வேட்டையாடுதல் போன்ற காரணங்களால், அட்லஸ் கரடி, பாலி புலி, கசுப்பியன் புலி, டோடோ, மங்கிய கடற்கரைச் சிட்டுக்குருவி, கிழக்கத்திய கோகர், யானைப் பறவை, தங்கத் தேரை, ஹாஸ்டின் கழுகு, ஜப்பானிய கடற்சிங்கம், ஜாவன் புலி, லப்ரடர் வாத்து, மோவா, பயணிகள் புறா, கொடுவாள் பூனை, ஸ்கொம்பேர்க்கின் மான், கட்டை-முக கரடி, ஸ்டெல்லரின் கடற்பசு, மேற்கத்திய கருப்பு காண்டாமிருகம், கம்பளி யானை, கம்பளி காண்டாமிருகம் போன்ற விலங்குகள் அழிந்துவிட்டவையாகவும், பர்பாரி சிங்கம்,  மெக்சிக்கன் ஓநாய், ஹவாயன் காகம் ஆகியன  காடுகளில் இருந்து அழிந்துவிட்டவையாகவும், சீனாவின் யங்கட்ஸ் ஆற்றில் காணப்படும் நன்னீர்வாழ் டால்பின்கள், கனடா நாட்டில் காணப்படும் வான்கூவர் தீவு மர்மொட் என்ற அணில் இனம்,  செஷல்ஸ் தீவுகளில் காணப்படும் உட்பை இறக்கை கொண்ட வெளவால்கள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் ஜாவன் காண்டாமிருகங்கள், அஸ்ஸாமிலும், நேபாளத்திலும் பரவலாகக் காணப்படும் மயிரடர்ந்த முயலினம், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்லாந்தில் மயிர் மூக்கினையுடைய பைம்மாக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மட்டுமே காணப்படும் டமரவ் என்னும் குள்ள நீர்எருமைகள், போர்சுக்கல் மற்றும் ஸ்பெயினில் காணப்படும் ஐபீரியன் பூனைகள்,  அமெரிக்க மற்றும் கனடா காடுகளில் காணப்படும் சிவப்பு ஓநாய்கள், சீனாவில் காணப்படும் குள்ள மலையாடுகள், சீனாவில் மட்டுமே காணப்படும் பாண்டா கரடிகள், மலை கொரில்லா, பிலிப்பைன் கழுகு, ஆசியாட்டிக் சிங்கம்,  போன்றவை அழியும் ஆபத்தில் உள்ளவையாகவும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளன.
 100ஆண்டிகளுக்கு முன் இவ்வுலகில் 1,00,000 புலிகள் காணப்பட்டன. ஆனால், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் தற்போது 1411 புலிகள் உள்ளன. பருவநிலை மாற்றங்களால் ஜெர்மனியில் 25 சதவீதமும், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் 70 சதவீதமும், தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போன்று, இந்தியாவிலும், கடந்த ஐந்தாண்டுகளில் 20 முதல் 35 சதவீத தேனீக்கள் அழிந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக உலகம் முழுவதிலும் பல விலங்கினங்கள் முற்றிலுமாக அழியத் தொடங்கியுள்ளன. மொத்தமுள்ள 5,499 வகையான பாலூட்டி விலங்கினங்களில் 79 முற்றிலுமாக அழிந்துவிட்டன. 194 வகையான பாலூட்டி விலங்குகள் கூடிய விரைவில் அழிந்துவிடும் என்ற அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 447 விலங்கினங்கள் அருகிவரும் வகையைச் சேர்ந்தவையாக கருதப்படுகிறன. மேலும் 497 வகையான விலங்கினங்கள் விரைவில் பாதிக்கப்படலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகில் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் வரை தாவரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 22 சதவீத தாவரங்கள் அதாவது 5இல் ஒரு மடங்கு தாவரங்கள் அழியும்நிலையில் உள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
துருவக் கரடிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
கடல் ஆராய்ச்சி நிபுணர்  பீட்டர் வதம்ஸ், புவி வெப்பமாதலினால், 2015ஆம் ஆண்டுக்குள் ஆர்ட்டிக் கடலில் உள்ள பனிக்கட்டிகள் முழுவதும் உருகிவிடும் என்றும்,  ஐ.நா. கமிட்டி அறிவித்தது போல் பனிக்கட்டிகள் 2030ஆம் ஆண்டு வரை இருக்காது என்றும் கூறியுள்ளார். இதனால் ஆர்டிக் கடலை சுற்றியுள்ள, வடக்கு ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டிகள் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவ கரடிகள் மொத்தமும் அழிந்துவிடும் என்றும்  அவர் எச்சரித்துள்ளார்.
மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடல் பகுதியின் பருவநிலையில் அதீத மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பம் கணிசமாக அதிகரித்துள்ளதால் மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது. நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைந்துவிடுகிறது. இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மீன்களின் எடை கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்ததைவிட, 2050ஆம் ஆண்டில் 14 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தெரிகிறது.
புவி வெப்பமாதல், துருவப் பனிப்பாறைகள் உருகிவழிதல், கடல் மாசுபடுதல், மிகை மீன்பிடித்தல், கட்டுப்பாடின்றி கடல்வளத்தை கொள்ளையிடுதல் என்பதாக நீண்ட வரிசையில் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. நிலம் சார்ந்த உயிரினங்களைப் போலவே மீனினங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன.
பவளப்பாறைகளில் ஏற்படும் பாதிப்புகள்
கடலில் உயிரினங்களின் ஆதாரமாய் விளங்குவது பவளப்பாறைகள் ஆகும். 2,00,000க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளில் வாழ்கின்றன. பருவநிலை மாற்றத்தினால், பவளப்பாறையில் ஒன்றிவாழும் நுண்ணுயிரி (ஜூ ஃப்ளாஜ்ஜெல்லே) அதனுடன் வாழமுடியாமல் போகின்றது. 0.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தாலே, அந்நுண்ணியிரிகளால் பவளப்பாறையுடன் ஒன்றிவாழ முடியாது. நுண்ணுயிர்கள் இருந்தால்தான், அதைச் சார்ந்திருக்கும் மீன் மற்றும் அனைத்து வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழமுடியும். கடலில் உள்ள மீன்வளத்தில் 3இல் 2 பகுதி அழிந்துவிட்டன. கரீபியன் கடல் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்குள் 75இல் இருந்து 85 சதவீதம் வரை பவளப்பாறைகள் அழிந்துவிட்டன. அதேபோல, ஆஸ்திரேலிய கடல் பகுதியிலும் பவளப்பாறை மற்றும் கடல்பாசிகள் அழிவது அதிகமாக உள்ளன. அங்கு கடந்த 50 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்துவிட்டன. இந்தோனேஷியா, மலேசியா, பவுபாநியூகினியா, பிலிப்பைன்ஸ் கடல் பகுதிகளில் பவளப்பாறைகள் அழிவது அதிகமாக உள்ளன. அங்கு 30 சதவீத கடல்பாசித் தாவரங்கள் அழிந்துவிட்டன. இப்பகுதியில் 3 ஆயிரம் அரியவகை மீன்கள் அழியும் நிலையில் உள்ளன.
மனிதகுலத்திற்கு  ஏற்படும் பாதிப்புகள்
உலகம் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கத் தவறியதால், உயிரிகள் உயிர்வாழ அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். லண்டன் தாரா சர்வதேச கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 110 கோடிக்கு மேற்பட்ட மக்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பருவநிலை மாற்றத்தால் உயிரிழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. உலகின் 20 நாடுகள் இந்த அறிக்கையை அதிகாரபூர்வ தகவல் என ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் உலகின் உள்நாட்டு உற்பத்தியில் 3.2 சதவீதம் வீழ்ச்சி அடையும். இதனால் பொருளாதார வளர்ச்சி கடும்பின்னடைவை சந்திக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை உயர்வு காரணமாக உருகும் பனிப்படலங்கள், சீரற்ற வானிலை, அதீத வறட்சி மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற காரணங்களால் உலகமக்களும், வாழ்வாதாரங்களும்  பெரிதளவில் பாதிக்கப்படப்போவது உறுதி. ஓசோன் படலத்தின் கார்பன் அளவு உச்சமடையும், இதனைத் தவிர்க்கத் தவறியநிலையில், இதனை ஏற்க உலகம் தயாராக வேண்டும்.  ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு, பட்டினி மற்றும் நோய் காரணமாக லட்சக்கணக்கானோர் பலியாகக்கூடும். இந்த இறப்பில் 90 சதவீத மக்கள் வளரும் நாடுகளை சேர்ந்தவராக இருப்பர். பருவநிலை நலிவடைந்த நிலையில் ஏற்பட இருக்கும் இந்த பாதிப்பு காரணமாக 20 வளரும் நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (Intergovernmental Panel on Climate Change - IPCC) தலைவர் ராஜேந்திர பச்சோரி 'இந்த பூமிப்பந்தில் வாழும் எந்தவொரு மனிதரையும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப்போவதில்லை' என்று கூறியுள்ளார். புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐ.நா. சபை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், பருவநிலை மாற்றத்தின் விபரீதங்களை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.  
பூமி தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை ஆகக் குறைந்தது 5 தடவைகளாவது இத்தகைய பெரியளவிலான அழிவுகள் இடம்பெற்றிருக்கக் கூடுமெனக் கூறப்படுகின்றது. இனியும் இந்த பூமித்தாய் அத்தகைய ஒரு  பேரழிவை சந்திக்கும் அளவுக்கு சக்திபெற்றவளாக இல்லை. எனவேஅப்புவித்தாயின் பிள்ளைகளாகிய நாம் ஒவ்வொருவரும் புவி வெப்பமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றில் அக்கறை கொண்டு நம்மால் முடிந்த அளவு மரம் வளர்ப்பதையும், இயற்கையைச் சீரழிக்கும் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதையும் நம் சிரமேல் கொண்ட கடமையாகத் தொடர்ந்து செய்யவேண்டும்.  இயற்கைப்  பாதுகாப்பு என்பது பொதுவானது அல்ல; மாறாக ஒவ்வொரு தனி நபருக்கும் உரித்தானது, ஒவ்வொரு தனி நபரின் பங்கும் அதில்  இன்றியமையாதது  என்பதை உலகறியச் செய்ய  வேண்டும்.
'இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது; தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது
கடல் இனிது; மலை இனிது; காடு நன்று
ஆறுகள் இனியனனௌலோகமும் மரமும் செடியும், கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன
பறவைகள் இனிய ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் மிகவும் இனியர்'

மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை? ஆனால் நடைமுறையில் பாரதி சிலாகிப்பதுபோல் உலகம் இனியதாகவா இருக்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியின் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்? கசப்பான மவுனம் தானே!